மத்திய குழுவிடம் ‘கஜா’ புயலை பேரிடர் இழப்பாக அறிவிக்க வலியுறுத்தினோம் தம்பிதுரை பேட்டி
மத்திய குழுவிடம் ‘கஜா‘ புயலை பேரிடர் இழப்பாக அறிவிக்க வலியுறுத்தினோம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர்,
கரூர் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி செயலாளர் பாலு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் (மண்மங்கலம்), கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் திருவிக, கிருஷ்ணன், காளியப்பன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் இதுவரை சந்தித்திராத புயலாக ‘கஜா‘ புயல் இருக்கிறது. சுனாமி வந்தபோது உயிர்சேதம் அதிகமாக இருந்தது. ஆனால் ‘கஜா‘ புயலால் பாதிப்பு அதிகமாக உள்ளது. யானையை போல் வந்த புயலால் பல மாவட்டங்களில் வாழை, தென்னை, மா, பலா, முந்திரி என விவசாய தோட்டங்கள் முற்றிலும் நிர்மூலமாகி விட்டது. மத்திய குழுவினர் பார்வையிட்டபோது நானும் இருந்தேன். மத்தியகுழுவினர் பார்வையிட்டு உண்மையிலேயே பாதிப்பு அதிகம் இருப்பதாக சொன்னார்கள்.
நாங்கள் குழுவிடம் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டோம். மேலும் ‘கஜா‘ புயலை ஒரு பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். வருகிற 11-ந்தேதி கூட இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க.வை சேர்ந்த 50 எம்.பி.க்களும் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்ததுபோல, ‘கஜா‘ புயலுக்கும் நிவாரணம் கேட்டு குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.