நிவாரண தொகை வழங்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது - தொல்.திருமாவளவன் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

Update: 2018-11-25 23:30 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:–

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் வல்லுனர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களை தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதித்ததில்லை. தானே, ஒகி போன்ற புயலால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ரூ.20 ஆயிரம் கோடி கேட்டிருந்த நிலையில் ரூ.200 கோடி அளித்துள்ளது. அதேபோல் இந்த முறையும் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து விடக்கூடாது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து தமிழக அரசு கேட்ட தொகையை வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். மேலும் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களுக்கு வீடுகளை கட்டித்தர வேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்குவது என்பது போதுமானதாக இல்லை. அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க மத்திய–மாநில அரசுகள் முன்வர வேண்டும். தமிழக அரசிடம் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளோம். சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்