பணியிழந்து தவிக்கும் மாணவர் விடுதி ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் பணியிழந்து தவிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்காமல் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Update: 2018-11-25 22:45 GMT

விருதுநகர்,

விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சட்டப்படி பணிபுரிந்த 45 ஆதிதிராவிட மாணவர் விடுதி ஊழியர்கள் தற்போது பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்டுஉள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் ஒதுங்கி செல்லாமல் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளில் தமிழக அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை புயல் பாதிப்புகளின் போது தேவையான நிதி உதவியை செய்ததில்லை. தற்போது ரூ.15 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியை மத்திய அரசு தாமதமில்லாமல் வழங்கவேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வீடு இழந்து தவிப்பவர்களுக்கு வீடுகள் கட்டித்தரவேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களின் நலன் காக்க நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்.

மத்திய– மாநில அரசுகள் குழந்தைகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ரஜினி காந்த் கூறியது சரியானதுதான். தி.மு.க.வுடன் நாங்கள் நல்ல நண்பர்களாக நீடிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதி ஊழியர்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி திருமாவளவனிடம் மனு கொடுத்தனர். பின்னர் சிவகாசி செல்லும் வழியில் அவர் குமராபுரத்தில் கட்சிக்கொடியையும் பெயர்பலகையையும் திறந்துவைத்தார். ஆமத்தூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் ராஜூ என்பவர் தனது திருமண விழா நடைபெறுவதையொட்டி திருமாவளவனிடம் மனைவியுடன் வந்து வாழ்த்து பெற்றார்.

மேலும் செய்திகள்