புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் புயல் பாதிப்பு இடங்களை அதிகாரிகள் பார்க்க வராததை கண்டித்து நடந்தது
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் மரங்கள், மின்மாற்றி, மின்கம்பங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது. புயல் கரையை கடந்து 10 நாட்கள் ஆகியும் சேதமடைந்த மின்மாற்றி, மின்கம்பங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை. குடிநீர் கிடைக்கவில்லை. சேதம் அடைந்த பகுதிகளை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாகுடியில் மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சார இணைப்பு, குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கஜா புயலால் அன்னவாசல் பகுதியிலும் ஏராளமான மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி சேதமடைந்த மின்மாற்றி, மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல கிராமங்களுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செங்கிப்பட்டி, குறுஞ்சாயன்வயல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவாக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.