திட்டமிட்டபடி இன்று முழுஅடைப்பு நடைபெறும் - சாமிநாதன் எம்.எல்.ஏ. உறுதி

திட்டமிட்டபடி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-11-25 22:30 GMT

புதுச்சேரி,

சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்கக்கோரியும், பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும் புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முழுஅடைப்பினை மறுபரிசீலனை செய்ய அ.தி.மு.க. கேட்டுக்கொண்டது. அதேநேரத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி இந்த பந்த் போராட்டம் தேவையற்றது எனவும் பாரதீய ஜனதாவினர் கேரளாவில் சென்று போராடுமாறும் கூறினார். முழுஅடைப்பு என்ற பெயரில் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் முழுஅடைப்புக்காக பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த முழுஅடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ஒரு சில தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் நேற்று பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

பாரதீய ஜனதா திட்டமிட்டபடி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும். முதல்–அமைச்சர் நாராயணசாமியின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம். பல்வேறு முழுஅடைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒட்டுமொத்த இந்துகளுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

தமிழர்கள்தான் அய்யப்பனை முழுமையாக சொந்தம் கொண்டாடுகின்றனர். எனவே சபரிமலை பிரச்சினையால் தமிழர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளோம். அவர்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்