மதவாதத்திற்கு எதிராக அனைத்து கட்சியும் ஓரணியில் இணைய வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி
மதவாதத்திற்கு எதிராக அனைத்து கட்சியும் ஓரணியில் இணைய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
நெல்லை,
மதவாதத்திற்கு எதிராக அனைத்து கட்சியும் ஓரணியில் இணைய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்‘ மாநாடு குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயத்த கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
பேட்டி
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கஜா‘ புயல் இதுவரை வந்த புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து உள்ளனர். விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்களை இழந்து உள்ளனர். வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த புயல் நிவாரணத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. புயல் பாதித்த பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும். மதவாதத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், நிர்வாகிகள் அமுதா மதியழகன், ஐகோர்ட்டு பாண்டியன், அரசு பிரபாகர், செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.