மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி பஞ்சாயத்து ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி லட்சுமி (வயது 53). இவர் தனது மகன் ராமச்சந்திரனுடன் ஆலங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு பாவூர்சத்திரம் அருகே வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராமச்சந்திரனை கீழே தள்ளிவிட்டு லட்சுமி கழுத்தில் கிடந்த கவரிங் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் பாவூர்சத்திரம்-செட்டியூர் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடையநல்லூரை சேர்ந்த யாசிர் முகமது (18) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், 2 பேரும் லட்சுமி கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் முறப்பநாட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் கவரிங் நகையை பறித்துள்ளனர். பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் ஒரு பெண்ணிடமும், பழைய பேட்டையில் ஒரு பெண்ணிடமும் நகையை பறிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, பாளையங்கோட்டை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.