மூன்றடைப்பு அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

மூன்றடைப்பு அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-25 21:30 GMT
நாங்குநேரி, 

மூன்றடைப்பு அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

நகை பறிப்பு வழக்கு

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள சூரப்பகுளம் பகுதியை சேர்ந்தவர் ராணி என்ற ராஜேஸ்வரி. 1989-ம் ஆண்டு இவரது வீட்டில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் ராணி அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன்புதுக்குளத்தை சேர்ந்த கணபதி (66) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கணபதி மட்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

கைது

இந்த நிலையில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கணபதி நின்று கொண்டிருப்பதாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு நின்ற கணபதியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பெண்ணிடம் நகை பறிப்பு வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட கணபதி தற்போது தூத்துக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்