நாங்குநேரி அருகே பரிதாபம் குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி சாவு

நாங்குநேரி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-25 21:30 GMT
இட்டமொழி, 

நாங்குநேரி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர்.

அண்ணன்-தம்பி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடி சவளைக்காரன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 40). அவருடைய மனைவி சரசுவதி (35). இவர்களுக்கு சிவபெருமாள் (12), நவீன்குமார் (7) ஆகிய 2 மகன்கள். பரப்பாடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சிவபெருமாள் 6-ம் வகுப்பும், நவீன்குமார் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூட விடுமுறையான நேற்று மாலை அவர்கள் இருவரும் வெளியே சென்று வருவதாக கூறி சைக்கிளில் சென்றனர். பின்னர் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அக்கம்பக்கத்திலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இதற்கிடையே ஊரின் அருகே உள்ள குளத்தின் கரையில் சிவபெருமாள், நவீன்குமார் ஆகியோர் சென்ற சைக்கிள், அவர்கள் உடுத்தியிருந்த உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் பதற்றத்துடன் பெற்றோரும் மற்றும் ஊர் மக்களும் குளத்துக்கு சென்று பார்த்தனர்.

பின்னர் குளத்துக்குள் இறங்கி தேடினர். அங்கு தண்ணீருக்கு அடியில் ஒரு பள்ளத்துக்குள் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இதனை பார்த்ததும் பெற்றோர் ஓடிவந்து மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

குளிக்க சென்ற போது...

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திலகம், சப்-இன்ஸ்பெக்டர் பெர்லின் பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குளத்தில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி அண்ணன்-தம்பி இருவரும் இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்