ஜவுளி வியாபாரி வெட்டி படுகொலை; மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்துள்ளான்.

Update: 2018-11-25 23:45 GMT

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 37). இவருடைய மனைவி பொன்னாத்தாள் என்ற பொன்னுமணி (23). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெயராமன் கமுதி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ஜெயராமனுக்கும், அவரது மனைவி பொன்னுமணிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணி அளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

தகவல் அறிந்ததும் கமுதி போலீசார் அங்கு சென்று ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொன்னுமணியை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், பொன்னுமணிக்கும், எதிர்வீட்டில் வசித்து வந்த அசோக்குமார்(27) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயராமனுக்கு தெரிய வந்ததும் அவர் கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஜெயராமனை கொலை செய்ய அசோக்குமார் திட்டமிட்டு உள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு ஜெயராமனை கொலை செய்வதற்காக அசோக்குமார் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொன்னுமணி தடுத்துள்ளார். ஆனால் அவரை ஒரு அறையில் தள்ளிவிட்டு ஜெயராமனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அசோக்குமார் தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் அசோக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக கமுதி போலீசார் மதுரை சென்றுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்