தட்டார்மடம் அருகே ஜோதிடர் வீட்டில் கொள்ளைபோன 111 பவுன் நகைகள் கட்டிலுக்கு கீழ் மீட்பு போலீசார் தீவிர விசாரணை

தட்டார்மடம் அருகே ஜோதிடர் வீட்டில் கொள்ளைபோன நகைகள் நேற்று அவருடைய வீட்டில் கட்டிலுக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது.

Update: 2018-11-25 22:15 GMT
தூத்துக்குடி, 

தட்டார்மடம் அருகே ஜோதிடர் வீட்டில் கொள்ளைபோன நகைகள் நேற்று அவருடைய வீட்டில் கட்டிலுக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிடர்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 70). ஜோதிடர். இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.

இவர் தனது மனைவியுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 வீடுகள் உள்ளன. தனது பூர்வீக ஓட்டி வீட்டில் இருந்து தினமும் காலை முதல் மாலை வரை பொதுமக்களுக்கு இவர் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். அதன் பிறகு இரவு பூர்வீக வீட்டுக்கு எதிரே உள்ள காங்கிரீட் வீட்டில் சென்று தங்குவார்.

111 பவுன் நகைகள் கொள்ளை

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு மர்மநபர்கள் ஓட்டு வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து அங்கு பீரோவில் இருந்த 111 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்துசென்றனர்.

மறுநாள் காலையில் பூர்வீக வீட்டை திறந்து பார்த்த போது பால்துரை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இன்பஅதிர்ச்சி

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் ஜோதிடம் பார்ப்பதற்காக பூர்வீக வீட்டை அவர் திறந்தார். பின்னர் அங்குள்ள கட்டிலுக்கு அருகே தரையில் அமர்ந்து அவர் ஜோதிடம் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது கட்டிலுக்கு கீழ் ஒரு துணிப்பை இருந்தது. அந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் பீரோவில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 111 பவுன் தங்க நகைகள் இருந்தன. ஆனால் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இல்லை. இருந்தபோதிலும் நகைகள் இருந்ததை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

உறவினர்களிடம் விசாரிக்க முடிவு

இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். அவர்கள் நகைகளை பெற்றுக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் அங்கு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் தொடர்புடையவர்கள்யார்? நகை மட்டும் திரும்பிவந்தது எப்படி? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அந்த நகைகளில் பதிவாகி இருந்த கை ரேகைகளை கொண்டு, பால்துரையின் உறவினர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த சந்தேகப்படும் படியான நபர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்