பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரினர் 75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு முகத்துவாரம் மணல் மேடு தூர்வாரிய நிலையில், மீனவர்கள் 75 நாட்களுக்கு பிறகு படகுகளுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Update: 2018-11-25 22:00 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 160 வகையான மீன்களும், 25 வகையான மிதவை புழுக்களும், 12 வகையான பறவைகள், கடல் தாவரங்கள், கடல் உயிரினங்களும் காணப்படுகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இவர்கள் ஏரியிலும், கடலிலும் மீன்பிடிக்க படகுகளை பயன்படுத்துகின்றனர். ஆரணி ஆறு, சொர்ணமுகிஆறு, காலாங்கி ஆறு ஆகிய 3 ஆறுகளின் வடி நிலப்பகுதியாக விளங்குவதால் இந்த ஏரி நிரம்பி முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கிறது.

இந்த ஏரி கடந்த 130 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 ஆறுகளின் கழிவு பொருட்கள் மூலம் ஏரி சேறும், சகதியுமாக மாறி வருகிறது.

கடலும் ஏரியும் இயற்கையாகவே சமநிலையில் இருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அதிகமாக உள்ள நிலையில் மீன்பிடி தொழில் நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இயற்கை சீற்றத்தால் முகத்துவாரம் மணல் மேடானது. இதனை தூர்வார வேண்டும் எனக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 2 முறை தூர்வாரப்பட்டது. மீண்டும் மணல் மேடானது. வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் பழவேற்காடு ஏரி நிரம்பியது. இந்த நிலையில் மீனவர்கள் ஒன்று கூடி அவர்களே ஒருவார காலமாக தூர்வாரி வந்தனர்.

இதனை தொடர்ந்து பழவேற்காடு ஏரியும், கடலும் கலக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியாக மீனவர்கள் 75 நாட்களுக்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்