கொத்தமங்கலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் போக்குவரத்து துண்டிப்பு - 6 கிராம மக்கள் அவதி
விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் 2 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் இருந்தது. இந்த ரெயில்வேகேட்டுகள் வழியாக கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர், தெளி, லட்சுமிபுரம், கோனூர் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் நகருக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ரெயில்வே நிர்வாகம் ஆளில்லா 2 ரெயில்வேகேட்டுகளையும் மூடிவிட்டது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி ஒரு ஆளில்லா ரெயில்வேகேட் இருந்த இடத்தில் மட்டும் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்ததோடு, அதற்கான பணிகளையும் அப்போதே தொடங்கியது. தற்போது இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்த சுரங்கப்பாதையை 6 கிராம மக்களும் விழுப்புரம் சென்று வர பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம், கொத்தமங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் சுரங்கப்பாதை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கொத்தமங்கலம்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 6 கிராமங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமங்களுக்கு இடையே சத்திப்பட்டு, தோகைப்பாடி, பெரும்பாக்கம் வழியாக சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் நகருக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து கொத்தமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சுரங்கப்பாதை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 6 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் அந்த வழியாக சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்றி போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும் இடத்தின் அருகே போக்குவரத்துக்கு ஏதுவாக மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரவேண்டும். இல்லையென்றால், 6 கிராம மக்களும் ஒன்று கூடி விரைவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.