பழையகட்டளை மேட்டு வாய்க்காலில் பச்சை நிறத்தில் வரும் தண்ணீர்

பழையகட்டளை மேட்டு வாய்க்காலில் பச்சை நிறுத்தில் வரும் தண்ணீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-24 22:55 GMT
நச்சலூர்,

கரூர் மாவட்டம், இனுங்கூரில் இருந்து நச்சலூர் வழியாக பழையகட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்காலில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பச்சை நிறத்தில் வருகின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை தண்ணீர் குடிக்க வைக்க அச்சப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் இந்த வாய்க்காலில் குளிப்பதால் சிலருக்கு உடலில் அரிப்புகள் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பச்சை நிற தண்ணீரால் பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி குளிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில், சாகுபடி செய்துள்ள நெல், வாழை, கரும்பு ஆகியவற்றிற்கு வாய்க்காலில் வரும் தண்ணீரைகொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படக்கூடும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் வாய்க்காலில் பச்சை நிறத்தில் வரும் தண்ணீரில் சாயக் கழிவுநீர் கலக்கிறதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து, தூய்மையான தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்