சமூக, பொருளாதார நிலை குறித்து 43,629 மராத்தா குடும்பங்களிடம் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்தது

மராத்தா மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து 43 ஆயிரத்து 629 குடும்பங்களிடம் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்ததாக மேல்-சபையில் மந்திரி ராஜ்குமார் படோலே தெரிவித்தார்.

Update: 2018-11-24 23:00 GMT
மும்பை, 

மராத்தா மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து 43 ஆயிரத்து 629 குடும்பங்களிடம் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்ததாக மேல்-சபையில் மந்திரி ராஜ்குமார் படோலே தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அறிக்கை

மராட்டியத்தில் 30 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட மராத்தா சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த நிலையில் மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூக, பொருளாதார நிலை குறித்து அறிந்துகொள்ள அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் சமீபத்தில் ஆய்வு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.

இதையடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், மராத்தா போராட்டத்தின் போது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று மராட்டிய மேல்-சபை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே பதிலளித்து கூறியதாவது:-

43,629 குடும்பங்களிடம் ஆய்வு

மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் மராத்தா மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து 43 ஆயிரத்து 629 மராத்தா குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதனை தொடர்ந்து அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

மராத்தா போராட்ட விசாரணையில் யார் மீதும் பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்