அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக பழனி பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

Update: 2018-11-24 22:45 GMT
பழனி, 

கொடைக்கானல் மற்றும் பழனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக பழனியில் உள்ள வரதமாநதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66 அடி வரை தற்போது தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 214 கன அடி நீர்வரத்து உள்ளது. அது அப்படியே மறுகால் பாய்ந்து செல்கிறது.

பாலாறு பொருந்தலாறு அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 61.45 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 348 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளை நம்பி இருக்கும் அய்யம்புள்ளி குளம், வையாபுரி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் நீர்மட்டமும் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த குளங்களை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கிறது. இதையடுத்து விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பழனியை அடுத்த பாலசமுத்திரம், அய்யம்புள்ளி, புதச்சு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பழனி வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி கூறுகையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது 400 ஏக்கருக்கும் மேல் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது. அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விரைவில் 5 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்