‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - நாராயணசாமி உறுதி

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.;

Update: 2018-11-24 23:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கஜா புயலால் காரைக்கால் பகுதி விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நானும், அமைச்சர்களும் புயல் வீசிய மறுநாள் காரைக்கால் பகுதிக்கு சென்று பார்த்தோம். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. 5 தொகுதிகளிலும் மரங்கள் சாய்ந்து, சாலைகள், 9,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 1,500 குடிசை வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சரவையை கூட்டி மீனவர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.2500, சேர்த்து ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.4,100ம், வேலைக்கு செல்ல முடியாத 9500 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரமும் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட மத்திய குழு 26–ந் தேதி(நாளை) காரைக்கால் வர உள்ளது. ஆய்விற்குப்பின்னர் என்னை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். பேரிடர் மீட்பு துறையில் உள்ள நிதி மற்றும் மத்திய அரசு தரும் நிதி முழுவதும் காரைக்கால் பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

சபரிமலை கேரள மாநிலத்தின் பிரச்சினை. அதற்காக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. குறிப்பாக புதுச்சேரியில் போராட்டம் நடத்துவது தேவையில்லை. இந்த போராட்டத்தை கேரளாவில் நடத்தினால் கண்டிப்பாக கேரள அரசின் செவிக்குச் செல்லும். எனவே புதுவையில் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டும்.

சட்டம்–ஒழுங்கை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உள்ளது. பா.ஜ.க. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மக்களுக்கு மத உணர்வு இருக்கலாம். ஆனால் புதுச்சேரிக்கு சம்பந்தமில்லாத சபரிமலை பிரச்சினைக்காக அறிவிக்கப்பட்டுள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்