திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம் உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
திட்டக்குடி,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களை மட்டும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமை தாங்கி, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
உதவி கணக்கு அலுவலர் வினோத், உதவியாளர் கமலாகார்த்திஷ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் உதவி ஆணையர் பாஸ்கரன் பேசியதாவது:-
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு வருடத்திற்கு 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 16 சிகிச்சை முறைகளுக்கும் 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் 23 வகை நோய் பரிசோதனை கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, கண் கண்ணாடி வழங்குதல், விபத்து மரணம், விபத்து ஊனம், ஈமச்சடங்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் தாசில்தார் சத்தியன், சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.