உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு நிதிஉதவி கலெக்டர் ஷில்பா தகவல்

சிறுபான்மையினர் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2018-11-24 21:45 GMT
நெல்லை, 

சிறுபான்மையினர் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின நல அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்கள் வகுப்பறை, அறிவியல் கூடம், கழிப்பறை, குடிநீர், மகளிர் விடுதி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கோரும் மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் வரையில் ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் கல்வி நிறுவனத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான மானிய உதவிக்குழுவின் பரிந்துரைப்படி தகுதியான விண்ணப்பங்கள் மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியான சிறுபான்மையினர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்