திருப்பூர் 22–வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் பாயும் கழிவுநீர்

திருப்பூர் 22–வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-11-24 22:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்திற்குட்பட்ட 22–வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பவானி நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இங்கு போதிய சாலை வசதிகளோ, சாக்கடை கால்வாய் வசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. தார்சாலைகள் போடப்படாததால் மழை நேரங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான சாக்கடை கால்வாய்களும் பராமரிப்பு இன்றி குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக செல்ல முடியாததால், அதில் தேங்கி நிற்கின்றனர்.

இதில் இருந்து கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தியாவதால் அந்த பகுதியில் மர்ம காய்ச்சலும் அடிக்கடி பரவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பவானிநகர், குறிஞ்சிநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் இருந்து வரும் நிலையில், இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரோடு முழுவதும் குப்பை கூளங்களுடன் சேறும், சகதியுமாக காணப்படுவதால் ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் உடனடியாக போதிய அளவு சாக்கடை கால்வாய்களை கட்டி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறியதாவது:–

திருப்பூருக்குட்பட்ட பல இடங்களில் காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சலின் தாக்கத்தின் சிகிச்சைக்காக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் எங்கள் பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் பவானிநகர், குறிஞ்சிநகர் பகுதிகளில் உள்ள பிரதான ரோடுகளில் பாய்ந்து செல்கிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஏராளமானோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் மருத்துவ முகாம் வைத்து பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார்கள். தொற்று நோய் அதிகமாகும் போது மட்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இங்கு வந்து ஏதோ கடமைக்காக சுகாதார பணிகளை செய்து விட்டு செல்கின்றனர். ஆனால் கொசு உற்பத்திக்கான காரணத்தை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமலே இருந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உடனடியாக சாக்கடை கால்வாய் வசதியையும், சாலை வசதிகளையும் செய்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட நோய்களின் தாக்கம் தீவிரம் ஆகும் முன்பு, அதை தடுப்பதற்காக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்