ரேஷன் கடைகளில் கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு வழங்க வேண்டும் பனை தொழிலாளர்கள் மேம்பாட்டு கூட்டத்தில் தீர்மானம்

ரேஷன் கடைகளில் கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த பனை தொழிலாளர்கள் மேம்பாட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2018-11-25 03:30 IST
நெல்லை, 

ரேஷன் கடைகளில் கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த பனை தொழிலாளர்கள் மேம்பாட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேம்பாட்டு கூட்டம்

சென்னை காமராஜர் சமூக நீதி பேரவை, முக்கூடல் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நெல்லை உடையார்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் பனை தொழில் மற்றும் தொழிலாளர்கள் மேம்பாட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது.

மதுரை கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய அலுவலர் சின்னதம்பி தலைமை தாங்கினார். நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், இயக்குனர் வி.எஸ்.கணேசன், வக்கீல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சமூகநீதி பேரவை பாபுஜி வரவேற்று பேசினார். இதில் வேதியியல் ஆய்வாளர் மோ.சே.செல்வக்குமார், பனை ஆய்வு மைய பேராசிரியை முத்துமாரீசுவரி ஆகியோர் பேசினர். பனை நாடு கள இயக்குனர் காட்சன், பனை பாதுகாப்பு ஆய்வாளர் அரசுமரியா, சேரன்மாதேவி தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுபாவாசுகி, பனை பயிற்சியாளர் ராஜ்குமார், தமிழ்நாடு சான்றோர் பேரவை ரெஜிசிங் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

ரேஷன் கடைகளில் கருப்புக்கட்டி

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

பனை மரங்கள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும். பனை வெட்டுவதை தண்டனைக்குரிய குற்றமாக அரசு அறிவிக்க வேண்டும். மாவட்டம் தோறும் ஒரு கோடி பனை மரங்கள் நடுவதற்கு அரசு திட்டம் தொடங்க வேண்டும். தற்போது உள்ள பனை மரங்களை கணக்கெடுக்க வேண்டும். கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகிய பனை பொருட்களை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனி என்ற வெள்ளை சர்க்கரை தடை செய்யப்பட வேண்டும். மது பொருட்கள் மற்றும் இதர போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு அரசு காப்பீடு செய்ய வேண்டும். பனையில் இருந்து கிடைக்கும் ஓலை மற்றும் இதர பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கண்காட்சி

இந்த கூட்டத்தையொட்டி, மண்டப வளாகத்தில் பனை ஓலை, நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான பெட்டிகள், விசிறி, கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பலர் வந்து பார்வையிட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார். தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தலைவர் ஜோசப் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாமிரபரணி பாதுகாப்பு இயக்க செயலாளர் ஜெயந் பீட்டர், சுபலதா, முத்தரசன் உள்ளிட்டோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்