தனியார் பஸ் மோதி விபத்து: ஸ்கூட்டரில் சென்ற பெண் சாவு

தனியார் பஸ் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற பெண் தலை நசுங்கி இறந்தார்.

Update: 2018-11-24 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு அக்ரஹாரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர்அலி. இவருடைய மனைவி முபின்தாஜ் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முபின்தாஜ் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று காலை முபின்தாஜ் வழக்கம்போல் வீட்டில் இருந்து வேலைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் சென்றபோது பின்னால், ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது முபின்தாஜ் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் முன்சக்கரம் அவருடைய தலையில் ஏறி இறங்கியது. இதில் முபின்தாஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும், பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த முபின்தாஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரான விஸ்வநாதன் (39) மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மனைவியின் உடலை பார்த்து அவருடைய கணவர் அக்பர்அலி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்து ஏற்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஈரோடு மாநகர் பகுதியில் தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. குறிப்பாக ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு அதிக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் பெருந்துறை ரோட்டில் செல்லும்போது அதன் டிரைவர்கள் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானை பயன்படுத்துகிறார்கள். இது இருசக்கர வாகன ஓட்டிகளை மிரட்டும் அளவுக்கு இருப்பதால் அச்சம் அடைகின்றனர். அதுவே பெரும்பாலான விபத்து ஏற்பட காரணமாக அமைகின்றன. இதைதடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றனர்.

மேலும் செய்திகள்