தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் நல்லகண்ணு பேட்டி
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று நல்லகண்ணு தெரிவித்தார்.
நெல்லை,
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை 25 ஆண்டுகள் பின்னால் தள்ளிவிட்டது என்று தெரிவிக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு ஒரு சோதனையான காலம்.
கூடுதல் நிதி
தமிழக முதல்-அமைச்சர் 5 நாட்களுக்கு பிறகு தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டுள்ளது. அது போதாது. மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதனால் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு குழு வந்துள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடுகிறார்கள். இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
ஆணவ கொலை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஆணவ கொலைகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், நிவாரண உதவியும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஆணவ கொலைகள் அதிகமாக இருக் கிறது என்று கூறினோம்.
அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதெல்லாம் இல்லை என்று கூறினார். அவர்களுக்கு இப்போதாவது புரிய வேண்டும். எனவே தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.