பொக்காபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட தனியார் தங்கும் விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலிகள் அகற்றம்

பொக்காபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட தனியார் தங்கும் விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேலிகளை வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினார்கள்.

Update: 2018-11-24 23:00 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதால் யானைகள் வழித்தடம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி கடந்த 2008–ம் ஆண்டு சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் மசினகுடி, பொக்காபுரம் மற்றும் அதனை சுற்றி யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதிகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை காலி செய்ய 2011–ம் ஆண்டு உத்தரவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தனியார் விடுதி உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு மதன் பி லோகூர் தலைமையில் 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைதொடர்ந்து யானைகள் வழிதடத்தில் பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் 39 தனியார் விடுதிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது. அதனை பார்த்த நீதிபதிகள் விதிகளை மீறி செயல்பட்டு வரும் 39 தனியார் விடுதிகளை சீல் வைக்க உத்தரவிட்டனர். மேலும், ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் அளித்தனர். அப்போது ஒரு கட்டிடம் மட்டும் தனியார் விடுதி இல்லை என்பது தெரிய வந்தது. அதனையடுத்து 38 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சீல் வைக்கப்பட்ட விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டு உள்ள மின்வேலிகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழைத்தோட்டம், சொக்கநள்ளி, சீகூர் பாலம் பகுதிகளில் உள்ள 31 விடுதிகளின் வேலிகள் மட்டும் அகற்றப்பட்டது. மற்ற விடுதிகளின் வேலிகள் அகற்றப்படாமல் இருந்தன. பொக்காபுரம் பகுதியில் உள்ள சில விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை விடுதி நிர்வாகமே அகற்றினர். ஆனால் ஒரு சில விடுதி உரிமையாளர்கள் மட்டும் அகற்றாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து அகற்றப்படாத மின்வேலிகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஊட்டி ஆர்.டி.ஓ. சுரேஷ் தலைமையில் வருவாய் துறையினர் இந்த பணியில் அதிரடியாக ஈடுபட்டனர். அவர்களுடன் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் புஷ்பாகரன், சிங்காரா வனச்சரகர் காந்தன், வனத்துறை ஊழியர்கள் மற்றும் மின்சாரத்துறையினரும் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்