ரெயில் பயணத்தின் போது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு புதிய செயலி

ரெயில் பயணத்தின்போது பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக புதிய செயலியை ரெயில்வே பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2018-11-24 23:00 GMT

கோவை,

ரெயில் பயணத்தின்போது, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு ரெயில்வே போலீஸ் சார்பில் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப் ஆப்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி கோவை ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதனை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த செயலியை, ரெயில் பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு, இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், நகைபறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியும். தனியாக சுற்றித்திரியும் குழந்தைகள் குறித்து இந்த செயலி மூலம் தகவல் பரிமாறினால் ரெயில்வே காவல்துறை சார்பில் உடனடியாக குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி ரெயில்வே பயணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்த செயலி தொடர்பாக ரெயில் பயணிகள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. முன்னதாக ரெயில்வே போலீஸ் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோவை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றி வேந்தன், கோவை ரெயில்நிலைய இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், போத்தனூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்