சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை ரெயில் நிலைய சாலையில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-24 22:15 GMT

கோவை,

கோவை காட்டூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ரெயில் நிலைய சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக வாலாங்குளத்திற்கு செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாய் அகலம் குறைவாக இருந்ததோடு, குறைந்த ஆழமே இருந்ததால் மழைக்காலங்களில் கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கியது.

எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க கோவை கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கி ரெயில்வே போலீஸ் நிலையம் வரை 305 மீட்டர் நீளத்துக்கு இந்த மழைநீர் கால்வாயை ஆழப்படுத்தி, அகலப்படுத்த ரூ.75 லட்சம் நிதி மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

மாதங்கள் பல கடந்தும் இந்த பணிகள் இதுவரை முடிக்கப்பட வில்லை. தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் மழைநீர் கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்காக கால்வாய் தோண்டப்பட்டு வருவதால் கழிவுநீர், சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

இந்த வழியாகத்தான் பி.எஸ்.என்.எல். அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஊழியர் சங்க கட்டிடம் ஆகிய இடங்களுக்கு செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

சாலையில் ஓடும் கழிவுநீரை மிதித்தபடிதான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. தற்போது டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவி வரும் நிலையில் சாலையில் கழிவுநீர் செல்லாமல் பணியை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் இதுபோன்ற பணிகளை செய்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ரெயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க 305 மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் கால்வாயை 6 அடிக்கு ஆழப்படுத்தி கட்டும் பணி நடக்கிறது. இதில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி முன் தொடங்கி ரெயில் நிலையம் வரை 110 மீட்டர் தூரமும், 2–ம் கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை 110 மீட்டர் தூரமும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

தற்போது மீதம் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தொடங்கி பாரத ஸ்டேட் வங்கி வரை 85 மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்