பனமரத்துப்பட்டி ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
பனமரத்துப்பட்டி ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் ரோகிணி வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.;
பனமரத்துப்பட்டி,
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ரோகிணி அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.
பனமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற அவர் புறநோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடம் மருந்துகள் இருப்பு குறித்தும், நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர் அங்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்த பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற கலெக்டர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த குழந்தைகளிடம் பேசி மகிழ்ந்தார். தொடர்ந்து பல்வேறு ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி செயலாளர் தேவிகுமாரி, சேலம் தாசில்தார் மாதேஷ், பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, மருத்துவ அலுவலர் மகிதா ஆகியோர் உடனிருந்தனர்.