நாங்குநேரி அருகே பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
நாங்குநேரி அருகே பட்டர்புரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே பட்டர்புரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதல் ஜோடி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள். அவர்களில் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகன், தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (35) என்பவருடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. லட்சுமியும் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முத்துக்குமாரும், லட்சுமியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
தூக்கில் பிணங்கள்
முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முத்துக்குமாருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் லட்சுமியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணங்களாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கள்ளக்காதல் ஜோடி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை முடிந்ததும் இருவரது உடல்களையும் உறவினர்கள் பெற்றுச்சென்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.