சேலத்தில் 3,840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து

சேலத்தில் இதுவரை 3 ஆயிரத்து 840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update: 2018-11-24 22:45 GMT
சேலம், 

சேலம் மாநகர பகுதிகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களா?, குடிபோதையில் இயக்குகிறார்களா?, சரக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுகிறார்களா? என போலீசார் வாகன தணிக்கையின் போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

கலெக்டர் அலுவலகம் அருகில், புதிய பஸ்நிலைய பகுதி, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே, 5 ரோடு, திருச்சி மெயின்ரோடு, ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து, ரத்து செய்து உள்ளனர். இதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- சேலத்தில் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை தடுக்க வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் மதுகுடித்துவிட்டு ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், சிக்னல்களில் விதி முறைகளை மீறுதல், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய 6 காரணங்களுக்காக வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 484 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதத்திற்கு மேல் விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்