தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இதுவரை 87 சாட்சிகளிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தகவல்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 87 சாட்சிகளிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளதாக நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 87 சாட்சிகளிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளதாக நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த விசாரணை அதிகாரி கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
5-ம் கட்ட விசாரணை
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி 5-ம் கட்ட விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை நேற்று முடிவடைந்தது. 3 நாட்கள் நடந்த இந்த விசாரணையில், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பாதிரியார் ஜெயசீலன் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
87 சாட்சிகள்
ஒருநபர் ஆணையத்தில் மொத்தம் 5 கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். 209 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. 5-ம் கட்ட விசாரணையில் மட்டும் 11 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
6-ம் கட்ட விசாரணை வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடக்க உள்ளது. அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அமைப்பினரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர்கள் 140 பேர் உள்ளனர். அவர்கள் யார், யார்? என்று அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளோம்.
440 பிரமாண பத்திரங்கள்
இதுதவிர போலீஸ் தரப்பில் 440 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் அவர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து 100 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க இருக்கிறோம். விசாரணை வேகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடி எழில்நகரை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு அரசு தரப்பில் நிவாரணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை நீதிபதி அருணா ஜெகதீசன் மனோகரனிடம் வழங்கினார்.