காமலாபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு: வெல்லம் தயாரிக்க வைத்திருந்த 93 டன் சர்க்கரை பறிமுதல் ரசாயன உரத்தை பயன்படுத்திய கரும்பு ஆலைக்கு ‘சீல்’
காமலாபுரம் பகுதியில் உள்ள கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 93 டன் சர்க்கரையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயன உரத்தை பயன்படுத்திய கரும்பு ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த காமலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொட்டியபுரம், சர்க்கரைசெட்டிபட்டி, தும்பிபாடி, காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் கரும்பு பாலுடன் வெள்ளை சர்க்கரையை கலந்தும், உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்தும் வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் கரும்பு பால் பாதி, வெள்ளை சர்க்கரை பாதி என கலந்து வெல்லம் தயாரிப்பதால் கரும்பு தேவை குறைகிறது. கரும்பின் விலை மிக குறைந்து டன் ரூ.1500-க்கு கூட கிடைப்பது இல்லை எனவும், வெல்லம் தயாரிக்க சர்க்கரை கலப்பதை தடுத்தால்தான் கரும்பு கட்டுபடியான விலை கிடைக்கும் என விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் கரும்பு விவசாயிகள் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து வெல்லம் தயாரிக்க சர்க்கரை கலப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் காமலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளில் திடீரென்று ஆய்வு செய்தனர். மேலும் கரும்பு ஆலைகளுக்கு சர்க்கரை வினியோகம் செய்யும் கடைகளின் குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில், காமலாபுரம் பிரிவு ரோட்டில் உள்ள தனியார் கடை குடோனில் வெல்லம் தயாரிக்க ஆலைகளுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த 50 டன் சர்க்கரையை பறிமுதல் செய்தனர். மேலும் 3 கடைகளில் 35 டன் சர்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி 15 கரும்பு ஆலைகளில் 8 டன் சர்க்கரையை பறிமுதல் செய்தனர். மொத்தம் 93 டன் சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பொட்டியபுரம் பகுதியில் உள்ள தங்கதுரை என்பவருக்கு சொந்தமான கரும்பு ஆலையில் சர்க்கரை மட்டுமன்றி வெல்லத்தில் கலக்க வைத்திருந்த 1 மூட்டை சூப்பர் பாஸ்பேட் ரசாயன உரம் இருந்ததைஉணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். காமலாபுரம் பகுதியில் சர்க்கரை ஏற்றி செல்ல பயன்படுத்திய டெம்போவையும் பறிமுதல் செய்தனர். காமலாபுரம் பகுதியில் வெல்லம் தயாரிக்க வைத்திருந்த 93 டன் சர்க்கரை பறிமுதல் செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.