தமிழக இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு சமத்துவ மக்கள் கழக கூட்டத்தில் தீர்மானம்

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-11-24 22:00 GMT
தூத்துக்குடி, 

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணை செயலாளர் அருள்ராஜ், மாநகர செயலாளர் காசிலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கட்சி நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் தி.மு.க.விற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் தூத்துக்குடி கடைகோடியில் உள்ள ரெயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, எர்ணாவூர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல்

கஜா புயல் பாதிப்பின்போது மக்கள் உயிரை அரசு காப்பாற்றி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிவாரண பணிகளை அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை. முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது பெரிய குறையாக உள்ளது. தினமும் அமைச்சர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். இந்த நிலையை முதல்-அமைச்சர் சரிசெய்ய வேண்டும்.

கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. பக்கத்து மாநிலத்தில் அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டதற்காக எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் பஸ் கண்ணாடி உடைப்பது போன்று வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது 2 புயல் வந்து உள்ளது. ஆனால் எந்த புயலுக்கும் மத்திய அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் அமைதியாக இருப்பதால் போதிய நிவாரண தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்