ஆத்தூர் அருகே விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆத்தூர் அருகே விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு ராமமூர்த்தி (10), சத்தியமூர்த்தி (7), ஜெயவேல் (3) என 3 மகன்கள் உள்ளனர். செல்வராஜ் தனது நண்பர்கள் பெரியசாமி, பூட்டி என்கிற ஆண்டி, பாண்டி ஆகியோருடன் சேர்ந்து அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 4 பேரும் கருமந்துறை மலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் மான், பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். இதனிடையே நள்ளிரவு நேரத்தில், பெரியசாமி, ஆண்டி ஆகிய 2 பேரும் செல்வராஜ் உடலை அவரது வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதைப்பார்த்த அவரது மனைவி சரோஜா, கதறி அழுதார். மேலும் செல்வராஜ் முதுகுப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு, குண்டு காயம் இருந்தது. இது குறித்து கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செல்வராஜ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நேற்று போலீசார் பெரியசாமி, ஆண்டி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வன விலங்கு வேட்டைக்காக 4 பேரும் நாட்டு துப்பாக்கியுடன் சென்று உள்ளனர். அப்போது செல்வராஜ், பாண்டி ஆகியோர் முன்னால் செல்ல, பின்னால் சற்று தொலைவில் பெரியசாமி, ஆண்டி ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே பெரியசாமி, ஆண்டி ஆகியோர் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது செல்வராஜ், முதுகில் குண்டுபாய்ந்து பிணமாக கிடந்துள்ளார். பாண்டி கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். இதைப்பார்த்த பாண்டி உடனே தப்பி ஓடி விட்டார்.
பெரியசாமி, ஆண்டி ஆகியோர் செல்வராஜின் உடலை தூக்கிக்கொண்டு வந்து, வீட்டு வாசலில் போட்டு விட்டு ஓடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள பாண்டியை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் செல்வராஜை, நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது ஏன்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே 4 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடதான் சென்றார்களா? என்பது குறித்து ஆத்தூர் உதவி வன அலுவலர் பிரபா விசாரணை நடத்தி வருகிறார்.
விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.