சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் - அதிகாரி தகவல்

சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும் என்று அதிகாரி கூறினார்.;

Update: 2018-11-23 22:00 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் தற்போது தத்தனூர் அருகே உள்ள த.வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வாராந்திர திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டு பண்ணையம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், நுண்ணீர்ப் பாசனம், உணவு தானிய இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை உதவி அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் எனவும், அதற்குள் நெல் சாகுபடி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.443 காப்பீட்டுத்தொகை செலுத்தி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்திடவும், கூட்டுப்பண்ணைய திட்டத்தில் உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வங்கியில் கணக்கு தொடங்கி இலக்கீட்டை அடைந்திடவும் அறிவுறுத்தினார்.

வேளாண்மை உதவி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயிர்கள் வாரியான சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி இலக்கீட்டைஅடைய வேண்டும் என விளக்கினார். மேலும் கஜா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் பயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் மற்றும் தரவு பதிவேற்ற பணியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்