புனேயில் வீடு புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகன் கைது கூலிப்படையை சேர்ந்தவர்கள்
புனேயில் வீடு புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இருவரும் கூலிப்படையினர் என்பது தெரியவந்தது.
புனே,
புனேயில் வீடு புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இருவரும் கூலிப்படையினர் என்பது தெரியவந்தது.
பெண் சுட்டுக்கொலை
புனே சந்தன்நகர் ஆனந்த் பார்க் பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஸ். கடந்த புதன்கிழமை அன்று இவரது வீட்டுக்குள் புகுந்த 2 பேர் அவரது மனைவி ஏக்தாவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் மாலை ரெயிலில் தப்பிச்செல்ல புனே ரெயில் நிலையத்திற்கு சென்ற இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசார் மீதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜானன் பவார் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இந்தநிலையில், இருவரில் ஒருவரை டாவுண்ட் ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தந்தை, மகன்கைது
விசாரணையில், அவரது பெயர் முகேஷ்(வயது19) என்பதும், தலைமறைவானது அவரது தந்தை சிவாஜி ராவ்(39) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் டெல்லியை சேர்ந்த கூலிப்படையினர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிவாஜி ராவை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், புனேயில் நடந்த ஒரு மத பேரணியில் துப்பாக்கியுடன் கலந்து கொண்டிருந்த ஒருவரை பேரணியில் சென்றவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிவாஜி ராவ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவர்களை வருகிற 30-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
ஏக்தாவை கொலை செய்ய அவர்களை அனுப்பி வைத்தது யார்? என்பதை கண்டறிய போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.