கள்ளப்பெரம்பூரில்: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கள்ளப்பெரம்பூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூரில், விக்னேஷ்வரன் என்பவர் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், தஞ்சை-வல்லம் சாலையில் மின்நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் மின் விளக்கு அமைக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை தனது கடையில் வேலை செய்து வந்த எலக்ரீசியன் ஆவராம்பட்டியை சேர்ந்த கலியபெருமாளின் மகன் ராஜேஷ் (24) உள்பட 3 பேர் கோவிலில் மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அவரை மீட்டு, சக ஊழியர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.