புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
மலைக்கோட்டை,
கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் நெல், தென்னை, வாழை, கரும்பு, கொய்யா, மா, பலா உள்ளிட்ட பல பயிர்கள் நாசமடைந்துள்ளன.
தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி ஓயாமரி பகுதியில், காவிரி ஆற்றுக்குள் மணலில் புதைந்து நூதன போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். சங்க திருச்சி மாவட்ட செயலாளர்கள் செந்தில், ஜான் மேல்கியோராஜ், போராட்ட குழு தலைவர் ராமலிங்கம், சங்க செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அந்த பகுதியில் ஒவ்வொருவராக யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு, திடீரென ஓயாமரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறை பகுதியில் ஒன்று சேர்ந்தனர். பின்னர் அனைவரும் ஆற்றுக்குள் சென்று மணல் திட்டு பகுதியில் உடல் பகுதியை மட்டும் மணலில் புதைத்து கொண்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டு தொகையை, காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்கவேண்டும் என்று கூறி, கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருச்சி கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், தலைமையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கரைக்கு வந்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.