சின்னதாராபுரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து வாலிபர் பலி 3 பேர் படுகாயம்
சின்னதாராபுரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
க.பரமத்தி,
திருப்பூர் மாவட்டம், கரையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன்கள் சரவணன் (வயது 22), முரளி (19). அதே பகுதியை சேர்ந்தவர் சபாபதி (40). வேலூர் மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர் அய்யப்பன் (32). இவர்கள் 4 பேரும் கரையூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று தொழிற்சாலையில் இருந்து ஒரு சரக்கு வேனில் செங்கல் மற்றும் சிமெண்டு குழாய்களை 4 பேரும் ஏற்றி கொண்டு, கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அய்யப்பன் வேனை ஓட்டினார். சபாபதி அருகில் அமர்ந்து இருந்தார். சரவணன், முரளி ஆகியோர் சரக்கு வேனில் பின்னால் அமர்ந்து வந்தனர். சின்னதாராபுரம் அருகே காஞ்சிப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வேனில் பயணம் செய்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன், அய்யப்பன், சபாபதி ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராட்டி கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சின்னதாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு வேன் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.