புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து அன்னவாசல் அருகே 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

அன்னவாசல் அருகே புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2018-11-24 03:15 IST
அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த குடுமியான்மலை ஊராட்சியை சேர்ந்த விசலூரில் கஜா புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் புயல் சேதம் ஏற்பட்டு 8 நாட்கள் ஆகியும், அந்த பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்தும், நிவாரணம் வழங்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை- மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அரசு அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள பெருமநாடு கிரஷர் பகுதியிலும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்தும், அப்பகுதியில் மின் சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நிவாரணம் வழங்கவில்லை என்றும் கூறி அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்