புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் வழங்க கோரி வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கஜா புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு வருமானம் அளித்து வந்த கால்நடைகளையும், தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களையும் இழந்து தவிக்கின்றனர். புயல் வீசிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதே போல் புயலில் காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், சேதம் அடைந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், படகு, வலைகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது போல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற 26–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.