புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல் அடக்கம்
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல் அடக்கம் நேற்று நடந்தது.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் (வயது 96). இவர் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூரணாங்குப்பத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினார்கள்.
புதுவை கவர்னர் கிரண்பெடி, சபாநாயகர் வைத்திலிங்கம், புதுவை முன்னாள் முதல்–அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, கனிமொழி எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ராதாகிருஷ்ணன் எம்.பி., காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, செயற்குழு உறுப்பினர் மணிரத்னம், மற்றும் புதுவை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தினார்கள்.
மாலையில் ஈஸ்வரி அம்மாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அவரது உடல் பூரணாங்குப்பம் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு இறுதி சடங்குகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.