திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கொட்டும் மழையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது தீப்பந்தம் அணைந்ததால் பரபரப்பு
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கொட்டும் மழையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றும்போது தீப்பந்தம் அணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை,
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் கார்த்திகை மகா தீப திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மாலை 5.30 மணி அளவில் மலைக்கோட்டையின் நடு பகுதியில் உள்ள தாயுமானசுவாமி சன்னதியில் இருந்து மேள தாளங்களுடன் தீப்பந்தம் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, செவ்வந்திவிநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகள் புறப்பாடாகி சித்திரை மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதற்கிடையில் தீப்பந்தம் மலை உச்சிக்கு எடுத்து செல்லும்போது, மழை காரணமாக அணைந்தது. தொடர்ந்து மீண்டும் தீப்பந்தம் ஏற்றப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் 237 அடி மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது, பக்தர்கள் ‘சிவ சிவா’ என்றும், ‘அரோகரா அரோகரா’ என்றும் கோஷங்கள் எழுப்பி சுவாமியையும், தீபத்தையும் வழிபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே கார்த்திகை தீப நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் மலைக்கோட்டையை சுற்றியுள்ள ஏராளமான வீடுகளிலும், சிறிய விளக்குகளை கொண்டு கார்த்திகை தீபங்கள் ஏற்றி சிவனையும், அம்பாளையும் வழிபட்டனர்.
மலைக்கோட்டையில் ஏற்றப்படும்இந்த கார்த்திகை தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். இதேபோல மலைக்கோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சுடலை தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.