உடுமலை வனப்பகுதியில் 2 கரடிகள் கடித்ததில் வாலிபர் காயம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 2 கரடிகள் கடித்ததில் வாலிபர் காயம் அடைந்தார்.

Update: 2018-11-23 22:00 GMT

உடுமலை,

உடுமலையை அடுத்த வனச்சரக பகுதியில் குருமலை மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த திருமன், சரவணன் ஆகியோரும் நேற்று முன்தினம் குருமலை பகுதியில் உள்ள மலைச்சந்து என்ற இடத்தில் ஈச்சம்புல் பறிக்க சென்றனர்.

பின்னர் ஈச்சம் புல்லை கட்டுவதற்காக அங்கு செடியில் இருக்கும் கொடியை எடுக்க சென்றனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு 2 கரடிகள் நின்றிருந்தன. திடீரென்று அந்த கரடிகள் சிவாவை தாக்கி கடித்தது.

இதை பார்த்த மற்ற 2 பேரும் சற்று தூரம் ஓடிச்சென்று சத்தம் போட்டனர். இதையடுத்து குருமலையை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சத்தம் போட்டதால் அந்த கரடிகள் அங்கிருந்து காட்டிற்குள் ஓடி மறைந்தன. கரடி தாக்கியதால் காயம் அடைந்த சிவாவை மலைவாழ் மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த வாகனம் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிவாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிவாவை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்