தந்தையிடம் பணம் பறிக்க நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடிய மெக்கானிக் போலீசார் தேடுவதை அறிந்து தாங்களாக வீடு திரும்பினர்

புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், தந்தையிடம் பணம் பறிப்பதற்காக நண்பருடன் சேர்ந்து மெக்கானிக் கடத்தல் நாடகமாடினார். போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் தாங்களாகவே வீடு திரும்பினர்.

Update: 2018-11-23 21:30 GMT
கோவில்பட்டி, 

புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், தந்தையிடம் பணம் பறிப்பதற்காக நண்பருடன் சேர்ந்து மெக்கானிக் கடத்தல் நாடகமாடினார். போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் தாங்களாகவே வீடு திரும்பினர்.

ஏ.சி. மெக்கானிக்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமதுசாலிகாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் மனோ கருப்பசாமி (வயது 21). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையிடம் தனக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கூறினார். அதற்கு அவர் சில ஆண்டுகள் கழித்து புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி தருவதாக கூறினார். இதனால் மனோ கருப்பசாமி தன்னுடைய தந்தையிடம் இருந்து பணத்தை பறித்து, புதிய மோட்டார் சைக்கிளை வாங்க திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் அவர், தன்னுடைய நண்பரான கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கட்டிட தொழிலாளி மோகனுடன் (18) சேர்ந்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார். நண்பரும் ஒத்துக் கொண்டதால், மாலையில் வீட்டில் இருந்து வெளியேறிய 2 பேரும் நள்ளிரவு வரை தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்லவில்லை.

போலீசார் தேடுதல் வேட்டை

இரவு 12 மணி அளவில் மனோ கருப்பசாமி தன்னுடைய தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை சிலர் காரில் கடத்தி சென்று, கோவில்பட்டி கணபதிபட்டி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து இளங்கோ கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருசந்திர வடிவேல், மணிமாறன், இசக்கிராஜா மற்றும் போலீசார் கணபதிபட்டி காட்டு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவருடைய செல்போன் எண் மூலமும் அவரது இருப்பிடத்தை கண்டறிய முயன்றனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த மனோ கருப்பசாமி, மோகன் ஆகியோர் நேற்று காலையில் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். கடத்தியவர்கள் தங்களை விடுவித்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

கடத்தல் நாடகம் அம்பலம்

இந்த நிலையில், மனோ கருப்பசாமி வீட்டுக்கு திரும்பி வந்ததும், இளங்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து மோகனிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது மனோகருப்பசாமி , தன்னுடைய தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், அவரிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டு, நண்பர் உதவியுடன் கடத்தல் நாடகமாடியதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த 2 பேரிடமும் போலீசார் எழுதி வாங்கி விட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்