பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு கொழுக்கட்டை அவிக்க ஓலை வெட்டியபோது பரிதாபம்

ஸ்ரீவைகுண்டத்தில் கொழுக்கட்டை அவிக்க ஓலை வெட்டியபோது, பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2018-11-23 21:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டத்தில் கொழுக்கட்டை அவிக்க ஓலை வெட்டியபோது, பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கூலி தொழிலாளி

ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியைச் சேர்ந்தவர் சித்திரைபாண்டி. இவருடைய மகன் பழனி செல்வம் (வயது 43). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கொழுக்கட்டை அவிப்பதற்கு தேவையான பனை ஓலையை வெட்டுவதற்காக, நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் அருகில் உள்ள பனை மரத்தில் ஏறினார்.

அப்போது மரத்தின் உச்சியில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

பரிதாப சாவு

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரைக் காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழுக்கட்டை அவிக்க தேவையான ஓலை வெட்டுவதற்காக, பனை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்