கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் சாவு

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-23 22:00 GMT
கோவை, 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு, வைரஸ், மர்ம காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவை கணபதி மாநகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி கோமதி (வயது 38). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் இருந்தது. இதற்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கோமதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி அன்னபூரணி (60). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந் தார். இதற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மூதாட்டிக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து அவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அன்னபூரணி பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 44 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 64 பேரும் என மொத்தம் 112 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்