பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பதால் பாதையை அடைத்த ரெயில்வே நிர்வாகம்

பொதுமக்கள், மாணவர்கள் அடிக்கடி தண்டவாளத்தை கடந்து செல்வதால், அந்த வழியாக இருந்த பாதையை ரெயில்வே நிர்வாகம் அடைத்துவிட்டது.;

Update: 2018-11-23 23:00 GMT

மானாமதுரை,

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே சுமைதூக்கும் தொழிலாளர் கட்டிடம் உள்ளது. இங்குள்ளவர்கள் சரக்கு ரெயில்களில் வரும் பொருட்களை இறக்கி வருகின்றனர். அதன்பின்பு அவர்கள் ஓய்வெடுப்பதற்காக இங்கு தங்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த கட்டிடத்திற்கு அருகில் ரெயில்வேக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த வழியாக பொதுமக்கள், மாணவர்கள் சென்று வந்தனர்.

இந்தநிலையில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் கம்பி வேலிகள் வைத்து அந்த வழியாக செல்லும் பாதையை அடைக்க முயன்றனர். அப்போது சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும், ரெயில்வே ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சார்பாக ஹிந்துர் மஸ்துர் சபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறும் போது, பொதுமக்கள், மாணவர்கள் இந்த பாதை வழியாக சென்று தண்டவாளத்தை அடிக்கடி கடந்து போவதும், ரெயில் தண்டவாளங்களில் கற்களை வைப்பதும் வாடிக்கையாக வருகிறது. இதனால் இந்த வழியாக வரும் ரெயில்கள் அடிக்கடி நின்று தாமதமாக செல்கின்றன. அதனால் இந்த பாதையை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதைத்தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தினர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடம் அருகே கம்பி வைத்து மறைத்து மாணவர்கள், பொதுமக்கள் யாரும் உள்ளே சொல்ல முடியாதபடி தடுப்பு வேலி தற்காலிகமாக பாதையை அடைத்தனர்.

மேலும் செய்திகள்