கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து; வேளாண் அதிகாரி தகவல்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை நிலையங்களின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-11-23 22:15 GMT

சிவகங்கை,

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் 73 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பருவத்திற்கு தேவையான உரங்கள் தற்போது யூரியா 2 ஆயிரத்து 411 மெட்ரிக் டன், டிஏபி 1,262 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் 1,434 மெட்ரிக் டன், பொட்டாஷ் 759 மெட்ரிக் டன், தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

உர மூட்டைகளில் அச்சிடப்பட்டு உள்ள விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. மேலும் மூடைகளில் அச்சிடப்பட்டு உள்ள உயர்ந்த பட்ச விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது.

விவசாயிகளுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து உரங்களை வினியோகம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை பட்டியல் கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும் விற்பனை நிலையங்களில் உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரம் விவசாயிகளுக்கு தெரியும்படி வெளியே வைக்க வேண்டும்.

உர மூடைகளில் அச்சிடப்பட்டு உள்ள விலையை விட கூடுதலாக விற்பனை செய்தாலோ அல்லது மூடைகளில் விற்பனை விலை அடித்து திருத்தம் செய்யப்பட்டு இருந்தாலோ விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

உரக்கட்டுப்பாடு சட்டம் 1985–ன் விதி முறைகளை மீறி கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால், அந்த விற்பனை நிலையங்களின் உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உர வினியோகம் மற்றும் விவசாயிகளுக்கு உரம் சரியான விலையில் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு, வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்