6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தில் தி.மு.க.வினர் அஞ்சலி வீரபாண்டி ராஜா தலைமையில் மவுன ஊர்வலம்

சேலம் பூலாவரியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி வீரபாண்டி ராஜா தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.

Update: 2018-11-23 22:15 GMT
சேலம், 

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் அடுத்துள்ள பூலாவரியில் உள்ள தி.மு.க. கிளை அலுவலகம் முன்பு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், முரசொலிமாறன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


இதையடுத்து அங்கிருந்து வீரபாண்டி ராஜா தலைமையில் வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வீரபாண்டி ராஜா மலர் வளையம் மற்றும் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த பிருந்தாசெழியன், மகேஸ்வரி காசி, நிர்மலா மதிவாணன், சாந்தி ராஜேந்திரன், பிரபு கவுதமி, சூர்யா தருண், கயல்விழி முத்துசங்கர், சிந்து ராம்குமார், மலர்விழி செந்தில் ஆனந்த், கிருத்திகா ஜெயரத்னா உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களும் அவருடைய நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம், இளைஞர் அணி சந்திரமோகன், குகை ரமேஷ், ஸ்கை நாகா, ஏ.டி.பாலு, சார்ப் நாகராஜ், வி.எஸ்.ஏ. குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்