ஆலங்குளம் அருகே வேன்-லோடு ஆட்டோ மோதல்; ஒருவர் பலி 12 பேர் காயம்

ஆலங்குளம் அருகே வேன்-லோடு ஆட்டோ மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2018-11-23 21:30 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே வேன்-லோடு ஆட்டோ மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர்.

வேன்-லோடு ஆட்டோ மோதல்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் சாமுவேல் மகன் பவுல்ராஜ் (வயது 37). லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து பிரித்திபா (35) என்ற மனைவியும், சாரோன் (9) என்ற மகனும், சாய்னா (7) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை தனது மகன் சாரோனுடன் பவுல்ராஜ் தனது லோடு ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் சென்றுள்ளார். அங்கு காய்கறிகளை இறக்கிவிட்டு மீண்டும் மதிய நேரத்தில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

நெல்லை- தென்காசி சாலையில் வெண்கலபொட்டல் விலக்கு அருகில் வரும் போது, எதிரே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற அய்யப்ப பக்தர்கள் வேனும், லோடு ஆட்டோவும் மோதிக் கொண்டன.

ஒருவர் பலி

இதில் பவுல்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறுவன் சாரோன் தலையில் பலத்த காயம் அடைந்தான். மேலும் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம் பூங்குணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வேலு (40), சக்திவேல், பச்சைக்கண்ணு, ராஜ், வேன் டிரைவர் கோவிந்தபுரத்தை சேர்ந்த அருள் (33) உள்பட மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வீரபுத்திரன் தலைமையில் வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 12 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பவுல்ராஜ் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்